Google
www www.tnuifsl.com
 
 
 
 

தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியம்

தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியம் (TNUDF), தமிழ்நாடு அரசால் 1996 ஆம் ஆண்டு நவம்பரில், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (ICICI Bank), வீட்டுவசதி மேம்பாட்டு நிதி நிறுவனம் (HDFC) மற்றும் ஐ.எல்&எப்.எஸ் நிதி சேவைகள் நிறுவனம் (IL&FS) ஆகிய தனியார் துறை நிறுவனங்களின் பங்களிப்புடன் ஒரு பொறுப்பாட்சியாக தோற்றுவிக்கப்பட்டது ஆகும். தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியமானது உத்தரவாதமில்லாத முறையில் குடிமை உள்கட்டமைப்புக்கான நீண்ட கால கடன் வழங்கும் முதல் பொது மற்றும் தனியார் துறை கூட்டாண்மை ஆகும். தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு பொறுப்பாட்சி நிறுவனம் (TNUITCL) தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியத்தை (TNUDF) நிர்வகித்து வருகிறது. இதன் பொறுப்பாட்சி குழு, இந்நிதியத்தின் கடன் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை அவ்வப்போது மதிப்பாய்வு செய்கிறது தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் லிமிடெட் (TNUIFSL)இந்நிதியத்தின் நிதி மேலாளராக உள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியம், உலக வங்கி, ஜெர்மன் மேம்பாட்டு வங்கி (KfW), ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) அயல்நாட்டு நிறுவனங்களிலிருந்து நிதியைப் பெற்று, தமிழ்நாடு மாநிலத்தில் நகர்ப்புற உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியுதவி செய்கிறது. தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியத்தின் நோக்கம், இம்மாநிலத்தின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தனியார் முதலீடுகளை அதிகரிப்பதற்கான நிதி இடையீட்டாளராக செயல்பட்டு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் திறம்பட மற்றும் நீடித்த நிலைத்தன்மையுடைய அமைப்புகளாக வளர்வதற்கும் அவை தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும் மிகத் தரமான நகர்ப்புற சேவைகளை வழங்குவதற்கும் ஏதுவாக செயல்படுவது ஆகும்.

தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியத்தின் நோக்கங்கள்

  • நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நகர்ப்புற உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியளித்தல்.
  • கூட்டு முயற்சி மற்றும் பொது-தனியார் கூட்டாண்மை மூலம் உள்கட்டமைப்பில் தனியார் துறை பங்கேற்பை எளிதாக்குதல்
  • நகர்ப்புற வளர்ச்சி அமைப்புகள் மூலதன சந்தையில் நிதி திரட்ட ஏதுவாக, அவற்றின் நிதி நிர்வாகத்தை மேம்படுத்துதல்

கடன் பெற தகுதியானவர்கள்

தமிழ் நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் , மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (CMWSSB) ஆகிய அமைப்புகள், நகர்ப்புற உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான கடன் உதவி பெற தகுதியுடையவை ஆகும்.

நிதி ஆதாரங்கள்

அரசு மற்றும் பிற பங்களிப்பாளர்களிடமிருந்து பெறப்பட்ட மூலதனம் மற்றும் அயல்நாட்டு நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட கடன் ஆகியவை தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியத்தின், நிதி ஆதாரங்கள் ஆகும். வெளி ஆதார கடன்களின் மூலம் தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்களின் விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன:

உலக வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு நீடித்த நகர்ப்புற வளர்ச்சி திட்டம் (TNSUDP)

உலக வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு நீடித்த நகர்ப்புற வளர்ச்சி திட்டம், இத்திட்டத்தில் பங்குபெறும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நகர்ப்புற சேவைகளை நீடித்த நிதி நிலையுடன் மேம்படுத்தல் மற்றும் மேம்பட்ட நகர்ப்புற மேலாண்மை நடைமுறைகளை தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் முன்னோடியாக செயல்படுத்துதல் ஆகிய நோக்கத்துடன் 03.06.2015 - இல் தொடங்கப்பட்டது

TNSUDP-ன் கீழ் உள்ள துணைத்திட்டங்களின் முன்னேற்றத்தின் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 31.03.2021 வரை ரூ.1164.97 கோடிகள் கடனாக வழங்கப்பட்டுள்ளது.

ஜெர்மன் மேம்பாட்டு வங்கி (KfW) நிதியுதவி யுடன் செயல்படுத்தப்படும் நீடித்த நகர்ப்புற உட்கட்டமைப்பிற்கான நிதியுதவி - தமிழ்நாடு (SMIF-TN) திட்டம்

நீடித்த நகர்ப்புற உட்கட்டமைப்பிற்கான நிதியுதவி – தமிழ்நாடு எனும் திட்டம், ஜெர்மன் மேம்பாட்டு வங்கி (KfW) நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகிறது .சுற்றுப்புறச் சூழ்நிலையை மேம்படுத்தி இயற்கை வளங்களைப் பாதுகாத்து நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இத்திட்டம் 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டம் இரண்டு நிலைகளைக் கொண்டது (நிலை 1 & நிலை 2). இத்திட்டத்தின் முதல் நிலை டிசம்பர் 2015-ல், நிறைவடைந்தது. இரண்டாவது நிலை இரண்டு பகுதிகளை (பகுதி-1 & பகுதி-2) கொண்டது

SMIF-TN-ன் கீழ் உள்ள துணைத்திட்டங்களின் முன்னேற்றத்தின் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 31.03.2021 வரை ரூ.1033.36 கோடிகள் (SMIF – TN Program: ரூ. 371.52 கோடிகள்; SMIF–TN-II-Part-1 Program: ரூ.328.46 கோடிகள் மற்றும் SMIF–TN-II-Part-2 Program: ரூ. 333.38 கோடிகள்) கடனாக வழங்கப்பட்டுள்ளது.

ஆசிய மேம்பாட்டு வங்கி (ADB) நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் தமிழ் நாடு நகர்ப்புற முன்னணி முதலீட்டு திட்டம் (TNUFIP)

தமிழ் நாடு நகர்ப்புற முன்னணி முதலீட்டு திட்டம் (TNUFIP), ஆசிய மேம்பாட்டு வங்கி (ADB) நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் மூன்று நிலைகளை கொண்டது (நிலை-I, நிலை-II, நிலை-III). இந்த மூன்று நிலைகளுக்கும் ஆசிய மேம்பாட்டு வங்கியின் நிதியுதவி 502.00 மில்லியன் அமெரிக்க டாலர். தமிழ்நாட்டில் உள்ள முக்கிய தொழிலக தெருவழிச் சாலைகளில், முதன்மையாக குடிநீர் வழங்கல், கழிவுநீர் மற்றும் வடிகால் ஆகிய உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல், புதுமையான திட்டங்களை ஊக்குவித்தல், மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் திறன், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் நகர்ப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கங்கள் ஆகும்.

TNUFIP-Phase-I-ன் கீழ் உள்ள துணைத்திட்டங்களின் முன்னேற்றத்தின் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 31.03.2021 வரை ரூ.241.50 கோடிகள் (நிலை 1-ன் கீழ் ரூ. 141.50 கோடிகள் மற்றும் நிலை 2-ன் கீழ் ரூ. 100.50 கோடிகள்) கடனாக வழங்கப்பட்டுள்ளது. இதன் மூன்றாம் நிலை ஆசிய மேம்பாட்டு வங்கியால் மதிப்பீடிட்டிற்கு எடுத்துக்கொள்ளப் பட்டுள்ளது.

கண்காணிப்பு & மீட்டெடுப்பு

கண்காணிப்பு மற்றும் மீட்டெடுப்பைப் பொறுத்தவரை, கடன் அபாயங்கள் மற்றும் கடனின் செறிவு ஆகியவற்றை மதிப்பிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நிலுவைத் தொகையைத் திருப்பிச் செலுத்துவதில் தேவையற்ற தாமதம் காணப்பட்டால், நெருக்கமான பின்தொடர்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. உள்ளாட்சி அமைப்புகளின் வசூல் மற்றும் / அல்லது கடன் சேவை இருப்பு நிதியைப் பராமரிக்க கடன் ஒப்பந்தத்தில் தேவையான ஏற்பாடு சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியம் தொடங்கப் பட்டது முதல் தொடர்ச்சியாக 100% வசூல் திறனை கொண்டுள்ளது.